திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.76 திருப்புத்தூர் - திருத்தாண்டகம்
புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
    போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்
    விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்
தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண்
    தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
1
வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்
    மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்
    குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்
    கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
2
மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
    விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
    நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
    புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
3
ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
    இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
    துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
    மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
4
கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
    காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்
    பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்
தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்
    சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
5
காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
    கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வான்காண்
    பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
    சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6
வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்
    வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
    பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
    ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
7
புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த
    புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
    வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
    ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
8
பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்
    பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று
    ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்
    பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
9
உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட
    ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரமதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்
    வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா
    அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com